Sunday, 2 November 2008

காளான் வளர்ப்பு முறை

காளான்

பூஞ்சை வகையைச் சேர்ந்த பச்சைய மில்லாத கீழ்நிலைத்தாவரம்தான் காளான். வேகவைத்த வைக்கோல்களுக்கிடையில் காளான் விதைகளை வைக்கும்போது அதிலிருந்து உற்பத்தியாகும் பூஞ்சை, காளானாக வளர்கிறது.
காளான் வளர்ப்பு மற்றும் காளான் விதை தயாரிப்பு இரண்டைப் பற்றியும் இங்குக் காண்போம்

 • காளான் வளர்ப்பு
 • காளான் விதை தயாரிப்பு
தேவையான சூழல்

குறைந்தபட்சம் நாற்பதடி நீளம், பதினேழு அடி அகலம் கொண்ட குடிசை தேவைப்படும். உயரம் ஆறு அடி. வெப்பநிலை 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையும், காற்றின் ஈரப்பதம் 85% குறையாமலும் பராமரிக்கவேண்டும். நல்ல காற்றோட்டம் தேவை. இல்லாவிட்டால், கரியமில வாயுவின் அடர்த்தி அதிகமாகி, காளானின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

செய்முறை
 1. காய்ந்த வைக்கோலை துண்டுகளாக்கி வேகவைத்து, உலர வைக்கவேண்டும்.
 2. இதைப் பிளாஸ்டிக் பைகளில் ( பைகள் கடைகளில் கிடைக்கும். 12X24 அளவு) ஒரு சுற்று வைக்கோல், அதற்கு மேல் விதை, திரும்பவும் வைக்கோல் அடுத்து விதை என அடுக்கு முறையில் விதைபோட்டு உருளைப்படுகைகள் தயாரிக்கவேண்டும். மேலே சொல்லப்பட்ட குடிசைக்கு மொத்தமாக 600 படுகைகள் வரை தேவைப்படும். ஒரு படுகையைத் தயாரிக்க 300 கிராம் விதைப்புட்டி, மூன்று கிலோ வைக்கோல் தேவைப்படும்.
 3. படுகையின் அடியில் பென்சில் அளவில் ஓட்டை போட்டு, அதைக் கயிற்றில் கட்டி உறி போல தொங்கவிடவேண்டும். ஒரு கயிற்றில் மூன்று உருளைகளைத் தொங்கவிடலாம்.
 4. பதினைந்து நாட்களில் பூசண இழைகள் படுகையில் பரவும். பிறகு பையை மெதுவாக கிழித்து மேல்பக்கம் நனைவதுபோல தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
 5. மூன்று நாட்களில் மொட்டு வரும். மொட்டு வந்த நான்காவது நாளில் காளான் முழு வளர்ச்சி அடைந்துவிடும். முதல் அறுவடைக்கு இருபத்தியிரண்டு நாட்களாகும்.
 6. நன்கு வளர்ந்த காளானை எடுத்து சுத்தம் செய்து விற்பனை செய்யலாம்.
 7. முதல் அறுவடைக்குப் பிறகு, படுகையின் மேல்பக்கத்தில் சுரண்டி விட்டு தண்ணீர் தெளித்து வந்தால், அடுத்த பத்து நாட்களில் இரண்டாவது தடவையாக காளான் அறுவடை செய்யலாம்.
 8. ஒரு நபர், ஒரு நாளைக்கு பத்துப் படுகைகளை தயார் செய்ய முடியும். தினமும் பத்து படுகைகள் தயார் செய்யும்போது, அறுபது நாளில் 600 படுகைகள் தயார் செய்யலாம். கடைசி பத்து படுகை முடியும்போது, முதன்முதலில் தயார் செய்த பத்து படுகைகளின் ஆயுள் முடிந்திருக்கும். பிறகு, அடுத்தச் சுற்று ஆரம்பமாகிவிடும். இப்படியே தொடர்ந்து காளான் வளர்ப்பைச் செய்துவரமுடியும்.
 9. இதுபோல ஒரு படுகை யிலிருந்து நான்கு தடவை அறுவடை செய்யலாம். ஒரு படுகையின் ஆயுள் அதிகபட்சம் அறுபது நாட்கள்.
காளான் விதை தயாரிப்பு
 1. தரமான வெள்ளை சோளத்தை தூசி இல்லாமல் சுத்தம் செய்துகொள்ளவேண்டும்.
 2. கையில் வைத்து அழுத்தினால் அமுங்குகிற பதத்துக்கு அதை அவிக்க வேண்டும்.
 3. பிறகு, காட்டன் துணியில் கொட்டி ஆற வைத்து, கிலோவுக்கு இருபது கிராம் அளவுக்கு கால்சியம் கார்பனேட் பவுடரை அதில் கலக்க வேண்டும்.
 4. ஆறுக்கு ஒன்பது அல்லது ஐந்துக்கு ஒன்பது அளவுள்ள பிளாஸ்டிக் பைகளில் இந்தக் கலவையை முன்னூறு கிராம் வீதம் போட்டு, அதன்மீது பஞ்சு அடைத்து, காற்றுப் புகாதவாறு ரப்பர் பேண்ட் கொண்டு இறுக்கமாகக் கட்டவேண்டும்.
 5. இதை 'ஆட்டோ கிளைவ்' எனப்படும் சூடுபடுத்தும் சாதனத்தில் இரண்டு மணி நேரம் 15 டிகிரி வெப்பநிலையில சூடுபடுத்தி, பிறகு ஒரு நாள் முழுக்க ஆற வைக்கவேண்டும்.
 6. பின்பு வெளிச்சம் இல்லாத அறையில், யூ.வி. லேம்ப் (புற ஊதாக்கதிர் விளக்கு) வெளிச்சத்தில் வைத்து கதவை மூடிவிடவேண்டும்.
 7. ஒரு மணி நேரம் வரை யாரும் அங்கு செல்லக்கூடாது. பிறகு விளக்கை அணைத்துவிட்டு, ஸ்பிரிட் விளக்கு கொண்டு அந்தப் பைகளைத் திறக்கவேண்டும். இதற்கு இரண்டு நபர்கள் தேவைப்படும்.
 8. பாக்கெட்டை திறந்ததும் ஸ்பிரிட் விளக்கின் அருகில் கொண்டு போனால், பஞ்சின் மீது தீப்பிடித்துவிடும். விளக்கிலிருந்து மிகவும் தள்ளி வைத்திருந்தால், நம்முடைய மூச்சுக் காற்று பட்டு விடும் (மூச்சுக் காற்றில் இருக்கும் கார்பன் -டை -ஆக்சைடு பூசண வளர்ச்சியைத் தடுத்து விடும்). எனவே, விளக்கைச் சுற்றி நான்கு விரல் அளவு தூரத்துக்குள்ளேயே திறந்து, ஏற்கெனவே நம்மிடம் தயாராக இருக்கும் தாய் விதையை சிறு கரண்டி மூலமாக எடுத்து, பாக்கெட்டுக்குள் கொஞ்சமாகப் போட்டு, காற்று புகாதவாறு திரும்பவும் கட்டிவிடவேண்டும்.
 9. அடுத்த பதினைந்து நாட்களில் விதைப்புட்டி தயார்.
தாய் விதை

நன்கு விளைந்த காளானின் தண்டுப்பகுதியும் இழைப்பகுதியும் இணையும் இடத்தில் கடுகளவு காளான் திசுவை சுரண்டி எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும். உருளைக்கிழங்கு, குளுக்கோஸ் பவுடர், அகர்அகர் (பேக்கரி மற்றும் எஸன்ஸ் பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்). ஆகியவைகளை சம அளவு எடுத்துக்கொண்டு கூழ் போல காய்ச்சி, இதில் ஏழில் ஒரு பங்கு எடுத்து சோதனைக் குழாய்களில் இட வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து, ஏற்கெனவே எடுத்து வைத்த காளான் திசுவை சோதனைக்குழாய்களில் இட வேண்டும். ஐந்து நாட்கள் கழித்து மெல்லிய இழை போல பரவியிருக்கும். இதுதான் தாய்விதை. புதிதாகக் காளான் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் பதினைந்து ரூபாய்க்கு கிடைக்கும் விதைப்புட்டிகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.

நிகர லாபம
பொருட்கள்செலவு லாபம
குடில் அமைக்க-25,000 -
விதைப் புட்டி 9,000 -
வைக்கோல் படுக்கை - 1,000 (600படுக்கைக்கு) -
பிளாஸ்டிக் பை - 500(5kg) -
கயிறு - 700(7kg) -
பேக்கிங் பை - 600(10kg) -
மொத்த செலவு -36,800-
மொத்தம் கிடைக்கும்
காளான் 900kg(1kg=ரூ.70) 63,000
நிகர லாபம் ....................... ரூ26,200/

3 comments:

bat1 said...

Dear sir,

really helful message can u give me how much total cost and how much return i could't get properly ur last estimated cost

Athleticwounder Exim said...

Dear sir ,
I Want to spawn, am from dharmapuri,9600395924, do u have more spawn seeds we buy it

rajasekar said...

Sir,

I want to grow the mashroom in home, for home use can you explain it is possible