Saturday 13 December 2008

இயற்கை உரங்கள் மற்றும் தயாரிப்புமுறைகள்

பஞ்சகவ்யா (சுமார் 20 லிட்டர் பஞ்சகவ்யா தயார் செய்ய தேவையான பொருட்கள்):
  1. பசுவின் புதுச் சாணி -5 கிலோ
  2. மூத்திரம் -3 லிட்டர்
  3. பால் -2 லிட்டர்
  4. தயிர் -2 லிட்டர்
  5. நெய் -500 கிராம்
  6. கரும்புச்சாறு -3 லிட்டர்
  7. இளநீர் -3 லிட்டர்
  8. வாழைப்பழம் -12
  9. கள் -2 லிட்டர்
செய்முறை
  1. பசுஞ்சாணியுடன் நெய்யைச் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் (மண்பானை, சிமென்ட் தொட்டி பயன் படுத்தலாம். உலோகம் பயன்படுத்தக்கூடாது) போட்டு நன்கு பிசைந்து, அதை மூன்று நாட்களுக்கு மூடி வைக்கவேண்டும்.
  2. தினம் காலை, மாலை இரண்டு வேளையும் பிசைந்து வைப்பது அவசியம். தொட்டியை நிழல்பாங்கான இடத்தில் கொசுவலை போன்ற மெல்லிய துணி, சணல் பை போன்றவற்றாலும் மூடிவைக்கலாம் (பாதுகாப்பாக வைக்காவிட்டால் ஈக்கள் முட்டையிட்டு புழுக்கள் உண்டாகி, அதன் காரணமாக பஞ்சகவ்யா உபயோகமற்றதாகிவிடும்).
  3. நான்காம் நாள் மீதியுள்ள 7 பொருட்களையும் போட்டு தினமும் காலை, மாலை இருவேளை நன்கு கலக்கி விடவும். 18 நாட்களில் பஞ்சகவ்யா தயார் ஆகிவிடும். 19-ம் நாள் முதல் பயன்படுத்தலாம்.
  4. இந்தக் கரைசலை 6 மாதங்கள் வரை தினம் இரு வேளை கலக்கிக்கொண்டே வந்தால், கெடாமல் இருக் கும். அதை பயிர்களுக்குப் பயன்படுத்தலாம். தினமும் கலக்கும்போது கலவைக்கு காற்றோட்டம் ஏற்படுகிறது. நுண்ணூயிர்கள் மிகுதியாக பெருகுகிறது.
  5. அதிக நாட்கள் வைத்திருக்கும்போது நீர் ஆவியாகி, கலவை சுண்டிவிடும் அப்போது தேவையான அளவு இளநீர் இல்லை என்றால் கரும்புச்சாறு அல்லது வெல்லம், கருப்பட்டி கலந்த நீர் ஊற்றி கலக்கி விடலாம்.
  6. கரும்புச்சாறு கிடைக்காத இடங்களில் 500 கிராம் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையுடன் 3 லிட்டர் தண்ணீர் சேர்த்து பயன்படுத்தலாம். கள் கிடைக்காத இடங்களில் 2 லிட்டர் இளநீரை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு வைத்தால் ஒரு வாரத்தில் அது கள்ளாக மாறியிருக்கும். இதுவும் கிடைக்காத இடங்களில் 2 லிட்டர் திராட்சைச் சாற்றை ஒரு வார காலத்துக்கு நொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம்.
அமிர்த கரைசல்
  1. பச்சை பசுஞ்சாணம் -10kg
  2. பசுவின் கோமியம் -10லிட்
  3. நாட்டு சர்க்கரை -250g
  4. தண்ணீர் -100lit

இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.

பிரம்மாஸ்திரா

மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.

அக்னி அஸ்திரம்

புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

சுக்கு அஸ்திரா

சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.

பீஜாமிர்தம்

தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.

ஜீவாமிர்தம்

பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.

கனஜீவாமிர்தம்

பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.

நீம் அஸ்திரா

நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

மீன் அமினோ அமிலம்

‘மீன் அமிலம்’ தயாரிப்பது மிகவும் எளிது. மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும் செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து... நன்கு பிசைந்து... ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே ‘மீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது.

2 comments:

murugesh said...

மிகச் சிறப்பான முறையில் இயற்கை உரங்கள், வளர்ச்சி ஊக்கிகளை தயாரித்தல் பற்றி விளக்கியிருப்பது அற்புதம்.

முருகேசன்.ம.,
பொத்தனூர்,
நாமக்கல் மாவட்டம்

க.மு.சுரேஷ் said...

மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.